போராட்ட அறிவிப்பால் பணிந்தது மாவட்ட நிர்வாகம்: சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்பு


சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவராக பதவியேற்று கொண்ட பிரியதர்ஷினி.

காரைக்குடி: உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பதவியேற்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், போராட்ட அறிவிப்பால் பதவியேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. இதையடுத்து ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்று கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் எம்எல்ஏ மாங்குடி மனைவி தேவியும், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி அய்யப்பனின் மனைவி பிரியதர்ஷினியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் தேவி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சான்று வழங்கினார். சில வாக்குகளை எண்ணவில்லை என பிரிதர்ஷினி புகார் தெரிவித்ததை அடுத்து அப்போதைய மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெயகாந்தன் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இதை ஏற்காமல் தேவி தரப்பினர் வெளியேறினர். அதைதொடர்ந்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி சான்று வழங்கினார். இதுதொடர்பாக தேவி தொடர்ந்த வழக்கில் முதலில் கொடுத்த சான்றிதழ் செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரியதர்ஷினியின் மேல்முறையீடு வழக்கில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தேவி ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றார். பிரியதர்ஷினி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றது செல்லும் என அக்.23ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. தொடர்ந்து, தேவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கிலும் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து தன்னை பதவியேற்க அனுமதிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் பிரியதர்ஷினி வலியுறுத்தினார்.

காரைக்குடியில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பிரியதர்ஷினி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டி.

ஆனால், பதவியேற்க நடவடிக்கை எடுக்காததால் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பதவியேற்க அனுமதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பிரியதர்ஷினி தரப்பினர் சிவகங்கை, காரைக்குடி பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டினர். மேலும் சங்கராபுரம் ஊராட்சி அலுவலகம் முன் பிரிதர்ஷினி ஆதரவாளர்கள் குவிந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பிரியதர்ஷினி பதவியேற்க அனுமதி அளித்தது. தொடர்ந்து பிரியதர்ஷினியை ஊராட்சித் தலைவராக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பிரியதர்ஷினி கூறுகையில்,"ஜனநாயகம் வென்றது. 4 ஆண்டுகளில் செய்ய முடியாததை 40 நாட்களில் முடிந்த அளவுக்கு செய்து தருவேன்" என்று கூறினார்.

x