மதுரை: மாநகராட்சியில் இல்லாத குப்பைகள் அதிகம் உள்ள 386 ‘ஹாட் ஸ்பாட்’கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த இடங்களில் தூய்மைப் பணியாளர் ஒருவரை மறைவாக நிற்க வைத்து, குப்பை கொட்டுவோரை மறைந்து இருந்து பிடித்து ரூ.100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் குடியிருப்பு தெருக்கள், முக்கிய சாலைகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 7 மணி முதல் சேகரித்து, வாகனங்களில் புறநகரில் உள்ள வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்டு போய் கொட்டுகின்றனர். தூய்மைப் பணியாளர்கள், ட்ரைசைக்கிள், பேட்டரி வாகனம், குட்டியானை மற்றும் புஸ் காட் போன்ற 4 வகையான வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.
‘புஷ் காட்’ வாகனத்தை ஒரு தூய்மைப் பணியாளர் கொண்டு சென்று ஒரு நாளைக்கு 100 முதல் 120 வீடுகளில் 80 கிலோ குப்பை சேகரிக்கிறார். ட்ரைசைக்கிளில் ஒரு தூய்மைப் பணியாளர் சென்று, 200 முதல் 250 வீடுகளில் 80 முதல் 100 கிலோ குப்பை சேகரிக்கிறார்கள். பேட்டரி வாகனங்களில் 2 பேர் சென்று 300 முதல் 400 வீடுகளில் 400 முதல் 500 கிலோ குப்பையை சேகரிக்கிறார்கள்.
குட்டியானையில் 3 பேர் சென்று, 600 முதல் 900 வீடுகளில் 2 டன் குப்பைகளை சேகரிக்கிறார்கள். இதுதவிர, முக்கிய சாலைகளில் 500 முதல் 750 கிலோ குப்பை பிடிக்கும் காம்பக்டர் பின் குப்பை தொட்டிகள், 1 முதல் 1 1/2 டன் குப்பை பிடிக்கும் டம்பர் பின் குப்பை தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாத இடங்களில் பொதுமக்கள் தினமும் கொட்டும் குப்பைகளை அகற்றுவது மாநகராட்சிக்கு சவாலாக உள்ளது. இந்த இடங்களில் கிடக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினாலும், அடுத்த சில மணி நேரங்களில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டுகிறார்கள். இந்த இடங்களை மாநகராட்சி குப்பையால் பாதிக்கப்படக் கூடிய இடங்கள் (garbage vulnerable point) என மாநகராட்சி குறிப்பிடுகிறது.
100 வார்டுகளில் இத்தகைய பகுதிகளை 386 இடங்களில் மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. இப்பகுதிகள் பள்ளி குழந்தைகள், பக்தர்கள், பொதுமக்கள் போன்ற மக்கள் அதிகம் நடமாட்டம் மிகுந்த இடங்களாக இருப்பதால் மாநகராட்சியால் குப்பை தொட்டிகளை வைக்க முடியாது. அதனால், இந்த குப்பை தொட்டிகள் இல்லாத இந்த இடங்களில் குப்பைகளை பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி ரூ.100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"இந்த அபராதம் நடவடிக்கை, கடந்த காலத்தில் இருந்தாலும், தற்போது தூய்மையான மதுரையை உருவாக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 386 இடங்களில் குப்பை கொட்டுவோரை சிசிடிவி வைத்து கண்காணிக்க முடியாது என்பதால், இந்த ஒவ்வொரு இடங்களில் ஒரு தூய்மைப் பணியாளர் காலை முதல் மதியம் வரை மறைவாக நிறுத்தி வைக்கப்படுகிறார். இந்த நேரத்தில் குப்பை கொட்டுவோரை கையும், களவுமாக பிடித்து அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
தனி நபர் முதல் முறை கொட்டினால் ரூ.100, கடைக்காரர்கள் முதல் முறை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்தடுத்து இதுபோல் அவர்கள் கொட்டி பிடிப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வகையில் ரூ.100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், 500-க்கும் மேற்பட்ட இடங்களாக இருந்த மாநகராட்சி குப்பையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் (garbage vulnerable point) தற்போது 386 ஆக குறைந்துள்ளது.
இந்த இடங்களையும் குறைக்க, குப்பை கொட்டுவோரிடம் விழிப்புணர்வு செய்து மீண்டும் இந்த இடங்களில் கொட்டக்கூடாது என அபராதம் விதித்து அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும், நிரந்தரமாக இந்த இடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க சாமி சிலை வைத்து, அப்பகுதி மக்களை வழிபட செய்வது, மரம் நடுவது, நடைமேடை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது." என சுகாதாரத் துறை அதிகாரி கூறினார்.