கோவை: கோவை மாவட்டம் ராமநாதபுரம் அருகே, ஆக்கிரமிப்பில் இருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடம் மீட்கப்பட்டது.
கோவை மாநகராட்சி 84-வது வார்டுக்கு உட்பட்ட, ராமநாதபுரம் அருகேயுள்ள நஞ்சுண்டாபுரத்தில் கடந்த 1997ம் ஆண்டு 2.24 ஏக்கர் பரப்பளவில், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன், மொத்தம் மூன்று பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் கட்டடப்பட்டது. இதற்கு அப்போதைய நகர ஊரமைப்புத் துறையினரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. 2.24 ஏக்கரில், 97,639 சதுரடி பரப்பளவில் மேற்கண்ட குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. மேலும், 20 சென்ட் இடம் பொது ஒதுக்கீட்டு இடமாக, இரண்டு இடங்களில் பிரித்து ஒதுக்கப்பட்டது.
அதில், ஒரு இடத்தில் 7.62 சென்ட் பரப்பளவு உள்ள பொது ஒதுக்கீட்டு இடம், அதன் மனைப்பிரிவு உரிமையாளரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதில், 3 சென்ட் இடத்தில், கட்டிடம் கட்டப்பட்டு மளிகைக் கடை மற்றும் சலவையகம் ஆகியவை இயங்கி வந்தது. நீண்ட ஆண்டுகளாக மேற்கண்ட ஆக்கிரமிப்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
பொது ஒதுக்கீட்டு இடத்தில் உள்ள மேற்கண்ட ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடித்து அகற்றி, இடத்தை மீட்க வேண்டும் என ஒரு தரப்பினரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் மாநகராட்சியால் தாமதம் செய்யப்பட்டு வந்தது.
இச்சூழலில், நீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் எதிர்வாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்புதாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை போலீஸார் பாதுகாப்புடன் இன்று (நவ.18) மதியம் இடித்து அகற்ற மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இதில் திருப்பமாக, மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புதாரரே கட்டிடத்தில் உள்ள பொருட்களை அகற்றி விட்டு, பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடத்தை நேற்று (நவ.17) மாலை இடித்து அகற்றிவிட்டார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அந்த இடத்தை மீட்டு அங்கு மாநகராட்சியின் பெயர் பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட இந்த இடத்தின் மதிப்பு ரூ.3 கோடி யே 50 லட்சம் ஆகும்.