நவம்பர் 19-25 உலக மரபு வாரம்: தொண்டி இடையமடம் சமணப்பள்ளியை தொல்லியல் சின்னமாக்க கோரிக்கை!


ராமேசுவரம்: நமது மரபுச் சின்னங்களை இளைய தலைமுறையினர் அறிந்து, பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அழிந்துவரும் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொண்டி அருகேயுள்ள இடையமடம் சமணப்பள்ளியை தொல்லியல் சின்னமாக பாதுகாக்கவேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சுந்தரபாண்டியன்பட்டினம், பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் கோபாலமடம், ராமர் பாதம் என அழைக்கப்படும் கோயில், சமணப்பள்ளி என 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

கருவறை, மகாமண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மகாமண்டப வலதுபுற சுவரில் 27செ.மீ. உயரமும், 17செ.மீ. அகலமும் உடைய நின்ற நிலையிலான 23-ம் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதன் அமைப்பு கொண்டு கி.பி.9-ம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப்பட்டதாக கருதலாம். இதன் கருவறையில் அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் கற்சிற்பம் இருந்து காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. கருவறை விமானம் இன்றி உள்ளது.

கருவறை, மகாமண்டபத்தில் மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. 18-ம் சமணத் தீர்த்தங்கரர் அரநாதர் வாகனம் மீன் என்பதால், இது அவருக்கு கட்டப்பட்டதாகக் கருதலாம். சுவரில் ஓவியங்கள் இருந்து அழிந்துபோயுள்ளன. மகாமண்டப சுவரில் உரலில் மருந்து இடிக்கும் ஒருவரின் புடைப்புச் சிற்பம், சமணர்களின் மருத்துவதானத்தைக் குறிப்பதாக உள்ளது. இங்கு 4 துண்டுக்கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி.13-ம் நூற்றாண்டு விக்கிரமபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் உள்ளது.

இதன் அருகில் நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட இரு பாதங்களின் கோயில் உள்ளது. இதன் இரு தூண்களில், தலைக்கு மேல் ஒரு குடை அமைப்புடன், வணங்கிய நிலையிலுள்ள இருவர் சிற்பம் உள்ளது. இவர்கள் இதை அமைத்தவர்களாக இருக்கலாம். இதன் முன் கருடாழ்வார் சிற்பம் உள்ளது. இது சுந்தரபாண்டியன் பட்டினத்தில் இருந்து அழிந்து போன தசரதராமவிண்ணகராழ்வார் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டதாக இருக்கலாம். இச்சமணக்கோயில், கிழவன் சேதுபதி காலத்தில் கோபாலமடமாக செயல்பட்டுள்ளது. அதற்கு மன்னர் நிலதானமும் கொடுத்துள்ளார்.

தென்மாவட்டங்களில் அனுமந்தக்குடியில் ஒரு கட்டுமான சமணப்பள்ளி வழிபாட்டில் உள்ளது. சமணப்பள்ளியாக, கோபாலமடமாக வரலாற்றில் இடம்பெற்ற இக்கோயிலின் மேற்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் உள்ளே இடிந்து அழிந்து வருகிறது. இதை பழுது நீக்கி தொல்லியல் சின்னமாக பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்தார்.

x