விழுப்புரம் மாவட்டத்தில் நவ.28, 29-ல் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு


சென்னை: அரியலூர், பெரம்பலூரைத் தொடர்ந்து நவ.28, 29-ம் தேதி விழுப்புரத்தில் களஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கோவை, விருதுநகரை தொடர்ந்து, நவ.14, 15 அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் மக்களுக்கான திட்டங்களை வழங்கி, ஆலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது. நவ.14-ம் தேதி மாலை சென்னையில் இருந்து திருச்சி சென்று, அங்கிருந்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சென்றேன்.

நவ.15-ம் தேதி காலையில் விசிக தலைவர் திருமாவளவன் என்னை விடுதியில் சந்தித்தார். கடந்தாண்டு பெரம்பலூர் சிப்காட் தொழிற்பூங்கா தொடர்பான விழாவில், அரியலூர் மாவட்டத்துக்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் வைத்திருந்தார். அவரது கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு நன்றி தெரிவித்தார். அதன்பின் நிகழ்ச்சிக்கு புறப்பட்டேன்.

செல்லும் வழியில் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தேன். ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் டீன் ஷூஸ் என்ற தோல் அல்லாத காலணித் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினேன். இங்கு பணியாளர்களில் ஏறத்தாழ 80 சதவீதம் பெண்கள்தான். உள்ளூரிலேயே ரூ.20 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் சம்பளம் என்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை வெகுவாக உயர்த்தக் கூடியதாக இருக்கிறது.

ஜெயங்கொண்டத்திலிருந்து அரியலூருக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் திரண்டு நின்று உறுதி அளித்தனர். திட்டங்கள் சரியாகப் போய்ச்சேர, களஆய்வுகள் மூலம் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். வாரணவாசி அங்கன்வாடியில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் 2-ம் தொகுப்பை தொடங்கி வைத்தேன். 6 மாததத்துக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கான சத்துப் பெட்டகங்களையும் வழங்கினேன்.

அதன்பின், அரியலூரில் நான் உரையாற்றியபோது பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களுக்குக் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்கள், அதில் பயன்பெற்றவர்கள், தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், அதனால் பெறக்கூடிய பயன்கள் இவற்றை எடுத்துரைத்தேன். நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன். பெரம்பலூர் செல்லும் வழியில், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் இல்லத்தில் தங்கி, மதிய உணவு சாப்பிட்டபின் புறப்பட்டேன்.

அதன்பின், பெரம்பலூர்- அரியலூர் இரு மாவட்டங்களின் ஆட்சியர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அரசுத் திட்டங்களின் நிலை குறித்தும், விரைந்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டேன். காலை உணவுத் திட்டம் போன்ற வரவேற்பு திட்டங்களை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.

அரசுசார்ந்த பணிகள் குறித்த ஆய்வுக்குப்பின், திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பணிகளில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினேன். மினிட்ஸ் புத்தகங்களை வாங்கிப் பார்த்து, இரு மாவட்டங்களின் ஒன்றிய– நகர- பேரூர்க் கழகங்களின் செயல்பாடுகளை அறிந்துகொண்டேன். அனைவரும் சுணக்கமின்றிச் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கினேன். அடுத்ததாக நவ. 28, 29-ம் தேதிகளில் விழுப்புரத்துக்கு செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x