சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களை காப்பீடு செய்வதற் கான காலக்கெடு கடந்த நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
முன்னதாகவே, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பிலும், பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சார்பிலும், பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை மத்திய அரசு தற்போது நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சம்பா பருவம். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை சரியாக பயிர் சாகுபடி நடைபெறவில்லை. அக்டோபர் மாதத்தில் குறைந்த அளவே பயிர் காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதியுடன் காப்பீடு காலவரையறை முடிந்தது. முன்னதாக, இந்த அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை செயலர் விவரங்களுடன் கடிதம் எழுதினார்.
இதையடுத்து, பிரதமரின் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, பயிர் காப்பீடு செய்வதற்கான இணைய இணைப்பு மீண்டும் 17-ம் தேதி (நேற்று) மதியம் முதல் செயல்பட தொடங்கிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.