அரியலூர்: தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் நேற்று கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகை கஸ்தூரி கைது அவசியமற்றது. அவர் பேசியதில் காயம்படவோ, வேதனைப்படவோ ஒன்றுமில்லை. வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர்.
கஸ்தூரி பேசியதால் காயமடைந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளாக தமிழ் பேரினத்தை, திராவிடம் என சொல்லி வருகிறார்கள். நாங்கள் எவ்வளவு காயப்பட்டு இருப்போம். கஸ்தூரி பேசியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். அதன் பிறகும் தனிப்படை அமைத்து, வேறு மாநிலத்துக்கு சென்று கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி அப்படி என்ன தவறு செய்தார்?
மணிப்பூர் கலவரம் நீண்டகாலமாக உள்ள சிக்கலாகும். கலவரத்தை கட்டுப்படுத்தவும், அதை தடுக்கவும் ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். பெரிய ராணுவக் கட்டமைப்பு, அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சொந்த நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள கலவரத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு கலவரத்தை உருவாக்கியவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தால், எப்படி அதை தடுப்பார்கள்? இவ்வாறு சீமான் கூறினார்