அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை: ஹெச்.ராஜா கருத்து


புதுக்கோட்டை: அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவும் இல்லை என்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நடிகை கஸ்தூரியை கைது செய்வதில் தமிழக காவல் துறைக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? சிறையில் கஸ்தூரிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை நீதித் துறை உறுதி செய்ய வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதியிடம் அரசியல் ஞானம் இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் 10,500 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலிகளாகவும், 950 உதவிப் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள் தரமானதாக இல்லாததால், மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது. அரசின் ஒரு துறைகூட திறமையானதாக இல்லை. தமிழக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார். நாங்கள் யாரும் அந்தக் கட்சியை கூட்டணிக்கு வருமாறு மனு வழங்க இல்லை, அவர்களுக்காக காத்திருக்கவும் இல்லை. அதேநேரத்தில், கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அந்த முடிவை செயல்படுத்தும் இடத்தில்தான் மாநில பாஜக உள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்று திமுக கனவு காண்கிறது. அது பலிக்காது. இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

x