மோசமான வானிலை: கும்பகோணத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் அமைச்சர் ஹெலிகாப்டர்


கும்பகோணம்: கும்பகோணத்தில் நிலவிய மோசமான வானிலையால் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் வந்த ஹெலிகாப்டர் 10 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம். இவர் இன்று காலை 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து கார் மூலம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து அய்யாவாடி பிரத்யங்ரா தேவி கோயில், திருநாகேஸ்வரம் ராகு தலம் ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய்தார்.

தரிசனம் எல்லாம் முடித்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டர் நிறுத்தி இருந்த மைதானத்திற்கு வந்தார். இந்தநிலையில், இன்று முழுவதும் கும்பகோணத்தில் வானம் பனிமூடி மேகமூட்டத்துடன் மோசமான வானிலை காணப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரை இயக்கும் பைலட் மேலதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு புறப்பட உத்தரவு கேட்டார்.

அவர்கள், 10 நிமிடத்திற்கு பிறகு புறப்படுமாறு தகவல் அளித்ததால், பைலட், அவர்கள் கூறியபடி 10 நிமிடத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஹெலிகாப்டர் மயிலாடுதுறையை நோக்கி சென்றது. அங்கு, கும்பகோணம் காவல் ஆய்வாளர்கள் சிவ செந்தில்குமார், ரேகாராணி தலைமையில் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

x