கடலூர்: வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் சுமார் 44,856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மழை பெய்து வருவதால் அந்த மழை தண்ணீர் செங்கால் ஓடை மற்றும் பல்வேறு காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று (நவ.17) ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரிக்கு செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் வழியாக விநாடிக்கு ஆயிரத்து 300 கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று (நவ.17) மாலை ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் மதகில் விநாடிக்கு 550 தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 73 கன தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பாசனத்துக்கு விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் பாசன வாய்க்கால்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
9 அடி உள்ள கீழணையில் தற்போது 8.2அடி தண்ணீர் உள்ளது. இது குறித்து சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், கடலூர் மாவட்டத்திலும், வீராணம் ஏரியின் நீர் பிடி பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு தேவையாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றார்.