பல்லாவரம்: சென்னை ஆவணக் காப்பகத்துக்கு வே.ஆனைமுத்து பெயரை சூட்ட வேண்டும் என சிந்தனையாளர் பேரவை சார்பில் நடந்த கூட்டத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரியாரின் நூல்களை தொகுத்த வே.ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழா பல்லாவரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. சிந்தனையாளர் பேரவை சார்பில் நடந்த கூட்டத்திற்கு புரட்சி இளைஞர் முன்னணியை சேர்ந்த பா.சீராளன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியை சேர்ந்த வாலாசா வல்லவன் பேசும் போது, ''சென்னை ஆவணக் காப்பகத்திற்கு வே.ஆனைமுத்துவின் பெயரை சூட்ட வேண்டும். பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் தலைப்பு வாரியாக தொகுத்தவர் வே.ஆனைமுத்து. அவரது நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும்.
பீகாரின் 32 மாவட்டங்களிலும் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தியவர் வே. ஆனைமுத்து. பெரியாரின் வாழ்க்கை குறிப்புகளை இந்தியா முழுவதும் அலைந்து சேகரித்து ஆவணப்படுத்தியவர். மண்டல் ஆணையம் உருவாகவும், அந்த ஆணைய அறிக்கை வெளியாகவும் பெரு முயற்சி எடுத்தவர் வே. ஆனைமுத்து'' என பேசினர். இந்தக் கூட்டத்தில் குடவாசல் எஸ்.காமராஜ், பீட்டர் துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.