விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு: மதுரையில் மக்கள் ஆர்ப்பாட்டம்


மதுரை: மாநகராட்சி பகுதியில் வீட்டு மனை, கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்த மக்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கென சின்ன உடைப்பு பகுதியில் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள், வீடுகள், மயானம் உள்ளிட்ட இடங்களை கையகப்படுத்துகின்றனர். இவ்விடங்களை கொடுத்தவர்கள் தங்களுக்கு மாநகராட்சி பகுதியில் சுமார் 3 சென்ட் இடம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டும், இழப்பீடு தொகையை கூடுதலாக தரவேண்டும் என, சின்ன உடைப்பு பகுதியில் கடந்த சில நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கியதால் போராட்டம் தீவிரமடைந்தது. இதையொட்டி, போலீஸார் சின்ன உடைப்பு பகுதியில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், சின்ன உடைப்பு பகுதியில் ஏராளானோர் திரண்டனர்.

வருவாய் துறையினர் வீடு, நிலங்களை கையகப்படுத்த முயற்சியில் ஈடுபட தொடங்கினர். இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். மேலும், சிலர் அருகிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் மண்ணெண்ணை கேன்களுடன் ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மயக்கமடைந்தனர்.

பின்னர் அதிகாரிகளும், போராட்டக்காரர் களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் நிலம், வீடுகள் கையப்படுத்த மேலும், ஒரு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்படும். கூடுதல் தொகை வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

x