ராமநாதபுரம் கூட்டுறவு வார விழா - கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்க ஊழியர் சங்கம் முடிவு 


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் விஜயராமலிங்கம்.

ராமநாதபுரம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் ஊழியர் சங்க விரோத போக்கைக் கண்டித்து, கூட்டுறவு வார விழாவில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்போம் என தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் விஜயராமலிங்கம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: ''கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் ஊழியர் சங்க விரோத போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கள அலுவலர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும் நடைமுறைக்கு சாத்தியக்கூறுகள் இல்லாத அரசாணை 109-ல் தெரிவிக்கப்படாத பணிகளை வலியுறுத்தும் செயல்முறை ஆணைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

சென்னை மண்டலத்தில் அரசாணை 109-க்கு முரணாக பொதுவிநியோக திட்ட வட்டாரங்கள் மறுசீரமைப்பு என்ற புதிய செயல்முறை ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு சார்பதிவாளர் காலிப்பணியிடம் இருந்தும் பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆய்வாளர்களை சொந்த மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு வழங்க மறுப்பது குறித்து பதிவாளரிடம் மாநில நிர்வாகிகள் நேரிலும், கடிதம் மூலமும் விரிவாக எடுத்துரைத்தும் மூன்று மாதங்கள் பொறுமை காத்திருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உணர்வு பூர்வமாக கொண்டாட உள்ள மாவட்ட கூட்டுறவு வார விழாவில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்பது என்றும், அப்போதும் நிதி சாராத நிர்வாகம் சார்ந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மாவட்ட ஆள்சேர்ப்பு பணிகளை முற்றிலும் புறக்கணிப்பது எனவும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

x