கிருஷ்ணகிரி: சென்னானூர் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் என தொல்பொருள் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் குன்னத்தூர் ஊராட்சி சென்னானூர் கிராமத்தில், புதிய கற்கால பண்பாட்டு கூறுகளை கண்டறியும் நோக்கில் தமிழக அரசு தொல்லியல் சார்பில் கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி முதல் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னானூர் மலையின் மேற்கு பக்க மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் பத்து அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் கூறும்போது, சென்னானூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்களிகள், வட்ட சில்லுகள், பானை வனை சில்லுகள், ஏர்கலப்பையின் இரும்பிலான கொழுமுனை, இரும்பிலான அம்பு முனைகள், ஈட்டிமுனை, குவார்ட்ஸ் கல்மணி, சுடுமண்ணாலான முத்திரைகள், மணிகள், விளக்குகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தவிர புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய வழவழப்பான மெறுகேற்றப்பட்ட கற்கோடாரி, எலும்பிலான கிழிப்பான் மற்றும் புதிய கற்காலத்தினை சார்ந்த பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது. சென்னானூரில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளில் தரையில் இருந்து 120 செ.மீ ஆழத்தில் இருந்து 196 செ.மீ வரை புதிய கற்கால பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாக 5 புதிய கற்கால மேருகேற்றப்பட்ட கற்கோடாரி கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் களமேற்பரப்பாய்வில் எட்டு கருவிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இக்கருவிகள் அனைத்தும் டோலராய்டு என்னும் மூலக்கற்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவிகள் வேட்டையாடுவதற்கும் மரங்களை வெட்டுவதற்கும், குழிகள் தோண்டுவதற்கும் மற்றும் முக்கியமாக வேளாண்மையில் நிலத்தினை உழுவதற்கு ஏர் கலப்பையாக பயன்பட்டிருக்கலாம். மேலும் புதிய கற்காலத்தில் பயன்படுத்திய கையால் வரையப்பட்ட பானைகள், தேய்த்து வழுவழுவாக்கப்பட்ட சிவப்பு, பழுப்பு மற்றும் ஒரு சில சாம்பல் நிற பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
B2 என்னும் அகழாய்வு குழியில் சுமார் 176 செ.மீ ஆழத்தில் முழுமையான இரு பானைகள் மற்றும் உடைந்த நிலையில் ஓர் பிரிமனை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதே குழியில் இவற்றை தவிர எழும்பினாலான கிழிப்பான் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை கொண்டு விலங்குகளின் ரோமங்களை எடுப்பதற்கும் விலங்கின் தோல்களை கிழிப்பதற்கும் பயன்பட்டிருக்கலாம்.
மேலும் 196 செ.மீ முதல் 230 செ.மீ ஆழம் வரை நுண்கற்கால கற்கருவிகள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. சென்னானூர் அகழாய்வில் காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்காலம், புதிய கற்காலத்தில் இருந்து இரும்பு காலத்திற்கான மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று தொடக்க காலத்தின் நிலை ஆகியவை இக்குழியில் காணப்படும் மண்ணடுக்கின் மூலம் அறிய முடிகின்றது.
மேலும் இத்தொல்லியல் தளத்தின் உறுதியான காலத்தினை அறிவியல் முறைப்படி அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நிலவும் சுற்றுசூழல் அடிப்படையிலும் தென்பெண்ணையாற்றின் கிளை ஆறான பாம்பாறு இத்தொல்லியல் மேட்டினை ஒட்டி பாய்வதால் புதிய கற்காலத்தில் வேளாண்மை மேற்கொள்வதற்கும் ஆடு மாடுகளை வளர்ப்பதற்கும் ஏற்ற இடமாக சென்னானூர் அமைந்துள்ளது. இவ்வாய்வுகளின் மூலம் தமிழகத்தில் சிறந்த புதிய கற்கால பண்பாட்டினை கொண்ட தொல்லியல் தளமாக சென்னானூர் விளங்குகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் என தெரிவித்துள்ளார்.