இலங்கை தேர்தல் முடிவுகள் முதல் டெல்லியை திணறடிக்கும் காற்று மாசு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


இலங்கையில் ஆளும் என்பிபி கூட்டணி ‘சரித்திர’ வெற்றி!: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி படுதோல்வி கண்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலின்போது, அதிபர் அனுர குமார திசநாயக்க, ‘அறுதிப் பெரும்பான்மை பெறுவது உறுதி’ என நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அது இதுபோன்ற வரலாற்று வெற்றியாக அமைந்துள்ளது அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் பலரையும் கூட ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் பல ஆண்டுகளாக குடும்ப ஆட்சியே ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், இடதுசாரியான அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் இந்த மாபெரும் வெற்றி கவனம் பெறுகிறது.

வைகோ கருத்து: இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அதிபர் திசாநாயக்க முற்படுவார்” என்றும் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் வேதனை: கடந்த 2022-ம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றம், “தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை,” என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி வேல்முருகன், தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். “கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகிவிட்டனர். அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது” என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், “தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவர்களுடைய சொந்தக் கட்சியை பற்றி மட்டும்தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா?” என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார் மேலும், “எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல் துறையினர்தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல் துறையினர் மீது குற்றம்சாட்டப்படுகின்றனர்” என்று நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதனிடையே மற்றொரு வழக்கில், ‘திமுக, அதிமுக என இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. தங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள மாறி, மாறி குறை கூறுகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என இருவரும் நினைப்பதில்லை’ என உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2-வது நாளாக சோதனை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்றது.

“மருத்துவர் பாலாஜி மீது குற்றம்சாட்ட திமுக முயற்சி”: சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர ஹெச்.ராஜா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது போன்ற கதைகளை உருவாக்க திமுக மற்றும் அதன் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க திமுக சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது தேவையற்றது, தவிர்க்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மத்திய அரசு மீது கேரள அமைச்சர் சாடல்: நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் மறுசீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுப்பது மிகவும் பாரபட்சமானது என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த நிலைப்பாடு அதன் தீவிர பாரபட்சத்தையே காட்டுகிறது. இதை நியாயப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

நவ.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இம்மாதம் 21-ம் தேதி வரை, அதாவது அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழா: பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் நகரில் நடைபெற்ற பழங்குடியினர் கவுரவ தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் நினைவாக நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.

நியூசிலாந்து அவையை அதிரவைத்த இளம் எம்.பி.: நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிரவைத்தது.

சபரிமலையில் இலவச வைஃபை வசதி!: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதையொட்டி வியாழக்கிழமை மாலை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து விளக்கேற்றினார். வரும் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் நடைபெறும். இதனிடையே, ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகவும், அவசர கால தொடர்புக்கும் சபரிமலையில் பிஎஸ்என்எல் சார்பில் இலவச வைஃபை வசதி தொடங்கப்பட்டது.

காற்று மாசு அதிகரிப்பால் திணறும் டெல்லி: தலைநகர் டெல்லி காற்று மாசால் திணறி வருகிறது. பலர் மூச்சுவிடுவதற்கு சிரமப்படும் நிலையில் காற்று மாசை வேகமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கட்டுமானம், வாகன பயன்பாடு என பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புகை மூட்டம் அதிகமாக காணப்படுவதால் பாதை தெளிவாக தெரியாத காரணத்தால் ரயில், விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பல ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லி வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அதிஷி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிலைமை சீராகும் வரை டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார். டெல்லியில் அத்தியாவசியமற்ற கட்டுமானம், கட்டிடங்களை இடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்-3 பெட்ரோல், பிஎஸ்-4 டீசல் வாகனங்கள், டீசல் ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

காற்று மாசு அதிகமாக இருக்கும் நேரங்களில், அதிலும் பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் முகக் கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

x