தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சியில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி எம்பி டாக்டர் ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேசிய அமைச்சர் கூறியதாவது,"தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி மூலம் 28,420 குடும்பங்கள் ரூ.136 கோடி அளவில் பயனடைந்துள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி மூலம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 1637 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 16,815 மகளிர் உறுப்பினர்கள் ரூ.48.47 கோடி அளவில் பயனடைந்துள்ளனர்.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 3,13,049 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.31.30 கோடி வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2023-24ம் ஆண்டில் 29,693 விவசாயிகளுக்கு ரூ.303.44 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 9,116 விவசாயிகளுக்கு 104 ஙகோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்கப்பட்டது. கூட்டுறவுத்துறை மூலம் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும்போது உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 3103 பயனாளிகளுக்கு ரூ.31.71 கோடி மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், கைம்பெண் கடன், டாம்கோ, மகளிர் சுய உதவிக்குழு கடன், பெண்கள் தொழில் முனைவோர் கடன் உள்ளிட்ட கடன் தொகைக்கான காசோலைகளையும், வருவாய்த் துறை மூலம் 1072 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நரசிம்மன், துணைப் பதிவாளர் பூர்விசா, இணைப் பதிவாளர் மற்றும் செயலாட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத் தாய், துணைத் தலைவர் முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.