சாலையோர கிணற்றில் விழுந்த தொழிலாளி: தொடர்ந்து நாய் குரைத்ததால் பொதுமக்களால் மீட்பு


மீட்கப்பட்டவர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சாலையோர கிணற்றில் தொழிலாளி விழுந்ததைப் பார்த்த நாய், தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தாதல் பொதுமக்கள், தீயணைப்புத் துறையினரால் அவர் மீட்கப்பட்டார்.

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் தேவகுமார் ராஜா (50). அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அருப்புக்கோட்டை டிஎஸ்பி அலுவலகம் எதிரே வந்தபோது, அவருக்கு சற்று தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகே இருந்த கிணற்றுக்குள் நிலை தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த நாய் ஒன்று வெகு நேரமாக கிணற்றின் அருகே நின்று குரைத்துக்கொண்டே இருந்துள்ளது.

இதைப் பார்த்த அப்பகுதியினர் கிணற்றுக்கு அருகே சென்று பார்த்தபோது, கிணற்றுக்குள் தேவகுமார் ராஜாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அப்போதுதான் கிணற்றுக்குள் ஒருவர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தேவகுமார் ராஜாவை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், சாலையோரத்தில் பாதுகாப்பின்றி உள்ள கிணற்றை சுற்றுச்சுவர் அமைத்து இரும்பு கிரில் அமைத்து மூடி வைக்கவும் போலீஸார் அறிவுறுத்திச் சென்றனர்.

x