திருக்கோவிலூர்: திருக்கோவிலூரை அடுத்த மேமாலூர் கிராமத்தில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்தவர்களின் குடியிருப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்கக் கோரி பாதிப்புக்குள்ளானவர்கள் இன்று திருக்கோவிலூர்- திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேமாலூர் ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியிருப்பதோடு, அதன் நீர்வரத்து வாய்க்கால்களையும் ஆக்கிரமித்துள்ளதால், அதை அகற்றிட வேண்டும் என அதே கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக ஏரி நீர்வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வருவாய் துறையினர் 3 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நோட்டீஸ் வழங்கிய போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், ஆக்கிரமிப்பு அகற்றம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 9ம் தேதி திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் பதட்டமான சூழலுக்கு இடையே நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் அகற்றப்பட்டதால் அதில் வசித்து வந்தவர்கள் தங்களுக்கு மாற்றிடம் வேண்டும் என கோரியிருந்தனர். வருவாய் துறையினரும் பரிசீலிப்பதாக கூறிய நிலையில், பாதிப்புக்குள்ளானவர்கள் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.