மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவ குப்பத்தில் தூண்டில வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி இன்று (நவ.15) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் மீனவர் பகுதியில் கடந்த சில வருடங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்து நிலையில் பல்வேறு இடங்களில் தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், நெம்மேலி மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நெம்மிலி மீனவ குப்பம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அறிவிப்பு வெளியாகியும் இதுவரையில் மேற்கண்ட பகுதியில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கூறி அப்பகுதி மீனவ மக்கள் இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நெம்மிலி மீனவ குப்பதை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் கடலில் இறங்கி தூண்டில் வளைவு விரைந்து அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் மற்றும் கோரிக்கை தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர். மேலும், தொடர்ந்து வரும் கடல் அரிப்பால் நெம்மிலி மீனவ குப்பம் ஆபத்து நிலைக்கு செல்வதாகவும், குடியிருப்புகளின் மிக அருகில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் கடல்நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதா அச்சம் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நெம்மேலி பகுதி மீனவர்கள் கூறுகையில், “தூண்டில் வளைவு அமைக்ககோரும் எங்களது கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக ஈசிஆர் சாலையில் மீனவ மக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பி வழங்கும் பணிகளை மேற்கொள்வோம்” என்றனர். மீனவர்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.