சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உட்பட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நலம் மற்றும் பொது நல மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை (கேஎம்சி), அயனாவரம் அரசு மனநல காப்பகம் (ஐஎம்எச்) ஆகிய 8 அரசு மருத்துவமனைகளில் முழு அளவில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்துவமனை, ராயபுபரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை என இந்த 3 மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது ‘எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே. நகர் அரசு மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை என இந்த 8 மருத்துவமனைகளில் நேற்று (14ம் தேதி) முதல் புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.