இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவரை தேர்வில் அனுமதிக்க உத்தரவு


சென்னை: இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர் இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி வழங்க சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தரமணி சீர்மிகு சட்டப்பள்ளி மாணவரான முகமது ஆரிப், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எங்கள் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த மோதல் தொடர்பாக இருதரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் எனது பெயரும் உள்ளது. என்னுடன் சேர்த்து சில மாணவர்களை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், நாங்கள் அளித்த புகாரின்பேரில் எதிர்தரப்பு மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது இடைநீக்கத்தை ரத்து செய்து, நவ.15 (இன்று) நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வு எழுத என்னை அனுமதிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வு எழுத மனுதாரரை அனுமதிக்க பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

x