தெற்கு ரயில்வேக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை ஒதுக்க ரயில்வே வாரியம் முடிவு


சென்னை: தெற்கு ரயில்வேக்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை ஒதுக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை தயாரித்து வழங்க, சென்னை ஐ.சி.எஃப்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிவேகத்தில் இயங்கும் ரயிலாக வந்தே பாரத் ரயில் திகழ்கிறது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயில் சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிக்கப்படு கிறது. தற்போது வரை, இங்கு 70-க்கும் மேற்பட்ட வந்தே பாரத்ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, மைசூர், விஜயவாடா வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இதுதவிர, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு தலா ஒரு வந்தே பாரத் ரயிலும், திருவனந்தபுரம் - காசர்கோட்டுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. பயணிகள் வரவேற்பு அதிகரித்துள்ள வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை ஒதுக்க ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த ரயில்களை தயாரித்து வழங்க சென்னை ஐசிஎஃப்-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வந்தே பாரத் ரயில்களும் தலா 20 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்களை தயாரித்து வழங்க ஐ.சி.எஃப்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வடக்கு ரயில்வேக்கு 20 பெட்டிகளை கொண்ட இரண்டு ரயில்களை தயாரித்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

x