சென்னை: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தால், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். பாதுகாப்பு நடவடிக்கையாக, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுடைய உறவினர்களின் கையில் ‘டேக்’ கட்டும் முறையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதேபோல, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் ‘டேக்’ முறையை தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவ கல்வி இயக்குநரக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மருத்துவர் பாலாஜி நலமுடன் இருக்கிறார். அவரை கத்தியால் தாக்கிய விக்னேஷ் மீது கடுமையான 7 சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறை சார்பில் தமிழக மருத்துவ கட்டமைப்பில் என்னென்ன சீர்திருத்தங்கள் கொண்டு வரலாம் என்று கடந்த ஆகஸ்டில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவமனை பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல், சுகாதாரத் துறை இணைந்து, பாதுகாப்பு கூட்டு தணிக்கை நடத்துவது, கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை உறுதி செய்து, அதில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணிப்பது, மருத்துவமனைகளில் போதிய வெளிச்சம், மின்விளக்கு உள்ளதா என்பதை உறுதி செய்வது, ஒப்பந்த ஊழியர் வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் முறையில் பராமரிப்பது, மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம் அமைத்து, காவல் ரோந்து பணியை முறைப்படுத்துவது, அனைத்து மருத்துவ ஊழியர்களும் ‘காவல் உதவி’ எனும் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வது’ என அக்கூட்டத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அதன்படி, மருத்துவமனைகளில் பல்வேறு மாற்றங்கள் படிப்படியாக செய்யப்பட்டு வருகின்றன. கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனைகளில் சோதனைக்கு மெட்டல் டிடெக்டர் அமைக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரியுள்ளனர். முதல் கட்டமாக ஒருசில இடங்களில்அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது எதிர்பாராதவிதமாக நோயாளியின் கை பட்டுள்ளது. ஆனால், மருத்துவரை அவர் தாக்கிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.