ஐகோர்ட் உத்தரவின்பேரில் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட அனுமதிப்பீர் - கோவை ஆட்சியரிடம் பெண் தலைவர் மனு


கோவை: நீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவராக தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோவை வெள்ளானைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை (நவ.14) மனு அளித்தார்.

கோவை, எஸ்எஸ்குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்தவர் கவிதா. மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை என கூறி தலைவர் பதவி பறிக்கப்பட்டதுடன், காசோலையில் கையொப்பமிடும் அதிகாரமும் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் ஊராட்சி மன்ற தலைவராக செயல்படவும், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கவும் 2024 அக்டோபர் 19-ம் தேதி ஆணை பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை பெற்ற அவர் தன்னை மீண்டும் ஊராட்சி மன்ற தலைவராக அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தார். மனுவில், “நான் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாகிறது. பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. துணைத்தலைவர் வி.ஆர்.ராஜன் ஆதிக்கம் அதிகமாக இருந்ததது.

கையெழுத்து மட்டும்தான் போட வேண்டும் வேறு எதையும் கேட்கக்கூடாது என்று துணைத் தலைவர் கூறி வந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட உத்தரவிட்டுள்ளது. உத்தரவை நடைமுறைப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x