டிரைலர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்


சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக துறைமுக நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து, டிரைலர் லாரி ஓட்டுர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு கன்டெய்னர்களை சோதனை செய்து அனுமதி வழங்க புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்படாததால் சரக்குகளை கையாளுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் துறைமுகத்துக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் கன்டெய்னர் லாரிகள் பல மணி நேரம் துறைமுகத்துக்குள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதைக் கண்டித்து லாரி ஓட்டுநர்கள் கடந்த 12-ம் தேதி இரவு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, துறைமுக நிர்வாகம் சார்பில் லாரி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அனைத்து துறைமுக டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு கூறியதாவது: "ஒரு வார காலத்துக்குள்ளாக துறைமுகத்தின் சரக்கு கையாள தாமதமாகும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாகவும், ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளோம். ஒரு வார காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் வேலை நிறுத்தத்தைத் தொடர்வோம்" என்று சுரேஷ்பாபு கூறினார்.

x