பாம்பன் புதிய பாலத்தில் வெற்றிகரமாக நடந்த சோதனை ஓட்டம் - விரைவில் திறக்க ஏற்பாடு


பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக நடைபெற்ற ரயில் சோதனை ஓட்டம். | படங்கள்: எல். பாலச்சந்தர்.

ராமேசுவரம்: பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையகத்தின் ஆய்வு வெற்றிகரமாக நிறைவுள்ள நிலையில், புதிய பாலத்தை விரைவில் திறப்பதற்கு ரயில்வே அமைச்சகம் சார்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரயில் பாலப் பணிகளுக்காக ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ராமேசுவரத்திற்கு வரும் ரயில், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்படுகிறது. இதனால் கடந்த 23 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையகத்தின் ஆய்வு நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், ரயில்வே தலைமை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீசுஷில் குமார் மௌரியா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்நாள் ஆய்வில், புதிய பாம்பன் ரயில் பாலத்தின் தூண்கள், கர்டர்கள், தண்டவாளம், கடலின் காற்றின் நிலையைக் கண்காணிப்பதற்கான அனிமோமீட்டர் அமைப்பு, பாலத்தின் ரயில் செல்வதற்கான சமிக்ஞை அமைப்புகள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதிய பாம்பன் ரயில் பாலத்தின் நடுசூவ கப்பல், படகுகளுக்கு வழிவிடும் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கி நேற்று ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

இரண்டாவது நாள் ஆய்வில், புதிய பாலத்தின் நடுவே கப்பல், படகுகளுக்கு வழிவிடும் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கி அதன் உறுதி தன்மை, தூக்குப் பாலத்தை தூக்கும் கால அளவு உள்ளிட்டவை கணக்கிடப்பட்டது. தொடர்ந்து புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் ரயில் நிலையம் வரையிலும் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கி சோதிக்கப்பட்டது.

ஆய்வு குறித்து மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா இன்று ராமேசுவரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த இரண்டு நாள் ஆய்வில் புதிய ரயில் பாலத்தின் தூண்கள், கர்டர்கள், செங்குத்து தூக்குப் பாலம், பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள், பாம்பன் ரயில் நிலையம், ராமேசுவரம் ரயில் நிலையம், பாம்பன் ரயில்வே கேட்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. வியாழக்கிழமை புதிய ரயில் பாலத்தில் 80 கிலோமீட்டர் வேகத்திலும் ரயில் இயக்கி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு முதன்மை ஆணையாளர் ஏ.எம். சவுத்ரியின் இறுதி கட்ட ஆய்வு அறிக்கை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டு, விரைவில் பாம்பன் ரயில் பாலம் திறப்பு தேதி அறிவிக்கப்படும். இதுவரையிலும் புதிய பாலத்தின் திறப்பு தேதி முடிவு செய்யப்படவில்லை. பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலத்தை எந்தவிதமான சேதமும் இல்லாமல் அகற்றி அதனை நினைவு சின்னமாக அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் வெற்றிகரமாக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில், புதிய பாலத்தின் திறப்பு விழா நடத்துவதற்கு ரயில்வே அமைச்சகம் சார்பாக ஏற்பாடுகள் துவங்க உள்ளது.

x