திருச்சி: ஐசிஎஃப்பில் ரூ.98 கோடிக்கு தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் தயாரிக்க ரூ.200 கோடி ஒதுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாக திருச்சியில் எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் என்.கண்ணையா குற்றச்சாட்டியுள்ளார்.
தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்குமான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, எஸ்ஆர்எம்யூ சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம், பொன்மலை ஆகிய பகுதிகளில் இன்று நடைபெற்றது. ஜங்ஷனில் நடந்த கூட்டத்துக்கு எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளர் என்.கண்ணையா தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், விஜயகுமார், கோட்டத் தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கண்ணையா செய்தியாளர்களிடம் கூறியது: "இந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் இருப்புப் பாதை பராமரிப்புப்பணியாளர்களை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். மறுபுறம் இருப்புப் பாதை பராமரிப்புப் பணியாளர்களை குறைக்க வேண்டும் என்று உத்தரவிடுவது மிகப்பெரிய முரண்.
அதை விட முக்கியமானது 4,500 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஐசிஎஃப்பில் வந்தே பாரத் ரயில் ஒன்றை ரூ.98 கோடியில் தயாரிக்கும் நிலையில், ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களுக்கு கூடுதல் தொகையில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
ரஷ்யா நிறுவனத்துக்கு ரூ.130 கோடியிலும், பிரான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.200 கோடியிலும் வந்தே பாரத் ரயில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி வருகின்றனர். அவ்வாறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களை ரயில்வே தொழிலாளர்கள் பராமரிக்க முடியாது. யார் தயாரிக்கிறார்களோ அவர்களே தான் செய்வார்கள். இதனால் ரயில்வே தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் தயாரிக்கும் கட்டிடத்தை மத்திய அரசே கட்டிக் கொடுக்கும்.
தவிர, அந்த ரயில்களை பராமரிக்க ஆண்டுக்கு 3.5 சதவீதம் என 35 ஆண்டுகள் அதற்கான தொகையை மத்திய அரசு வழங்கும். இதனால் ரயில் தொழிலாளர்கள் மட்டுமல்ல மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். நமது வரிப் பணம் வீணடிக்கப்படுகிறது. இதை ஆல் இந்தியா ரயில்வே பெடரேஷன், எஸ்ஆர்எம்யூ ஆகிய சங்கங்கள் எதிர்க்கிறது. வருங்காலத்தில் இதுபற்றி மக்களிடம் எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்" என்று கண்ணையா கூறினார்.