புதுச்சேரி: புதுச்சேரி நகரில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக ரூ.3 கோடி மதிப்பில் சிசிடிவி கேமரா, செல்போன், லேப்டாப் சார்ஜர் செய்வது உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 15 ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள் அமைப்பதற்கான பணியை இன்று முதல்வர் ரங்கசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்குடை இல்லை. இருக்கிற நிழற்குடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழைக்காலங்களில் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதுச்சேரி போக்குவரத்துத் துறை ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரி நகரில் நவீன வசதிகளுடன் முதல் கட்டமாக 15 ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னையைச் சேர்ந்த தனியார் (ஸ்கைராம்ஸ் அவுட்டோர் அட்வர்டைசிங்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்திடம் ஒப்புதல் வழங்கப்பட்டள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் பயணியர் நிகழ்குடை அமைப்பதற்கான பூமி பூஜை தட்டஞ்சாவடி தொழிற்பேட்டையில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் புதச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் குமரன், வட்டார போக்குவரத்து அதிகாரி சீத்தாராம ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, ஜிப்மர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகில், லாஸ்பேட்டை மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி, செஞ்சி சாலை, கொசக்கடை வீதி - செஞ்சி சாலை சந்திப்பு உள்ளிட்ட 15 இடங்களில் முதல்கட்டமாக ஸ்மார்ட் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது.
இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகளில் சிசிடிவி கேமராக்கள், நவீன இருக்கை ஏற்பாடுகள், எல்இடி விளக்குகள், செல்போன், லேப்டாப்-களுக்கான சார்ஜிங் சாக்கெட்டுகள் மற்றும் சக்கர நாற்காலியில் பயணிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளங்கள், புதுச்சேரி மேப் புதுச்சேரி போன்ற பல வசதிகள் இருக்கும். மேலும் பயணிகள் தகவல் அமைப்பும் பொருத்தப் பட்டிருக்கும். இது பேருந்துகளின் வழித்தட எண்கள், பேருந்துகள் வந்து சேரும் தகவல் மற்றும் அவற்றின் மதிப்பிடப்பட்ட இடம், வருகை நேரம் போன்ற நிகழ் நேர போக்குவரத்துத் தரவுகளை வழங்கும்.
அதோடு இந்த ஸ்மார்ட் பயணியர் நிழற்குடைகளில் இரண்டு எல்இடி பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று பேருந்துகளின் வருகையைப் பற்றிய தகவலை வழங்கும், மற்றொன்றில் தனியார் நிறுவன விளம்பரங்கள் இடம்பெறும். தற்போது தொடங்கப் பட்டுள்ள இப்பணி 3 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இரண்டாம் கட்டமாக மேலும் 5 இடங்களில் ஸ்மார்ட் பயணியர் நிழற்குடை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.