சேலம்: ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஏராளமானோர் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை சென்று வருவது வழக்கம். பக்தர்கள் சொந்தமாக வாகனங்களை ஏற்பாடு செய்தும், ரயில்களிலும் சபரிமலை யாத்திரை செல்வர்.
இந்நிலையில், சபரிமலை சீசன் தொடங்குவதால் தெற்கு ரயில்வே சார்பில் சேலம், ஈரோடு வழியாக, கர்நாடகாவின் ஹூப்ளி- கேரளாவின் கோட்டயம் நகரங்களுக்கு இடையே, ஹவேரி, ரானிபென்னூர், ஹரிஹர், தாவணகெரே, பீரூர், அரிசிகரே, தும்கூர், சிக்க பன்னவாரா, எஸ்எம்விடி- பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு,திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், எட்டுமானூர் ஆகிய நகரங்கள் வழியாக, வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் 19-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ஹூப்ளி- கோட்டயம் (எண்.07371) வரும் 19-ம் தேதி முதல் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஹூப்ளியில் மாலை 3.15 மணிக்குப் புறப்பட்டு, சேலம் நள்ளிரவு 3.05 மணி, ஈரோடு அதிகாலை 4.05. திருப்பூர் அதிகாலை 4.53 மணி, போத்தனூர் காலை 6.28 மணி என வந்தடைந்து, கோட்டயத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி 14-ம் தேதி வரை நீடிக்கும்.
இதேபோல், மறுமுனையில், கோட்டயம்- ஹூப்ளி (எண்.07372) ரயிலானது வரும் 20-ம் தேதி முதல் கோட்டயத்தில் இருந்து, வாரந்தோறும் புதன்கிழமைகளில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டு போத்தனூர் இரவு 9.48 மணி, திருப்பூர் இரவு 10.33 மணி, ஈரோடு இரவு 11.20 மணி, சேலம் நள்ளிரவு 12.17 மணிக்கு வந்தடைந்து மறுநாள் மதியம் 12.50 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.