மருத்துவர் மீது தாக்குதல்: கோவில்பட்டியில் பணியை புறக்கணித்து அரசு மருத்துவர்கள் போராட்டம்


கோவில்பட்டி: சென்னையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி நேற்று கத்தியால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து தமிழ்நாடு மருத்துவ சங்க கோவில்பட்டி கிளைச் செயலாளர் மருத்துவர் சிவநாராயணன் தலைமையில் இன்று காலை கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகள் மருத்துவர்கள் மோசஸ், பத்மநாபன், மதன கோபால், பத்மாவதி, புவனேஸ்வரி, கமலா மாரியம்மாள், கோமதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி கோஷமிட்டனர்.

இப்போராட்டத்தில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 42 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிகளை புறக்கணித்து கலந்து கொண்டனர். அரசு மருத்துவர்கள் போராட்டம் காரணமாக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, தாய் சேய் நலப்பிரிவு, எலும்பு முறிவு, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.

மேலும், மருத்துவமனைக்கு இன்று காலை வருகை தந்த 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக தொடர் சிகிச்சை பெறக் கூடியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சைகளை மட்டும் மருத்துவர்களும், செவிலியர்களும் மேற்கொண்டனர்.

x