நமது நாடு சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்க அடித்தளம் அடிப்படை கல்விதான்: முதல்வர் ரங்கசாமி


புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: நமது நாடு சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பிற நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற நாடாக இருக்கிறது. இதற்கு அடித்தளம் அடிப்படை கல்வி தான் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் குழந்தைகள் நாள் விழா இன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி முதன்மை விருந்தினாராக பங்கேற்று சிறந்தப் படைப்பாளிக் குழந்தைகளுக்கான விருதுகளை வழங்கினார்.

புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி குழந்தைகள் நாள் விழா போட்டிகளில் மண்டல அளவில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் பள்ளிகள் தொடங்கவும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ அங்கீகாரம் பெறவும் தேசிய தகவலியல் மையம் மூலம் தொடங்கப்பட்ட இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

மேலும், பள்ளிக்கல்வித்துறை மூலம் தயாரிக்கப்பட்ட இந்த வருடம் பள்ளி முன்பருவ குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள் மற்றும் 6-ம் வகுப்புக்கான புதுச்சேரியின் வரலாறு புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார். விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் நல்ல உயர்கல்வி மாணவர்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு குறை உள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது நமது பிள்ளைகளுக்கு திறமை இருந்தாலும் பேசுவதில், பதில் கூறுவதில் மனதளவில் அச்சம் உள்ளது. இதனை பல நிறுவனங்கள் சொல்வதை நான் அறிந்திருக்கின்றேன்.

அதையெல்லாம் போக்க மாணவர்களின் கற்றல் திறன், சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கான பயிற்சி எப்படி? இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளை சிறந்த முறையில் பராமரிப்பதில் அரசு கவனம் கொண்டுள்ளது. கட்டிடங்களை பழுதுபார்த்தல், கழிப்பிட வசதி, நல்ல குடிநீர் என அனைத்து வசதிகளையும் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு காரணம் பள்ளிக்கல்வி என்பது சிறப்பாக இருக்க வேண்டும். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் அரசு பள்ளிகளில் ஆர்வமாக படிக்க வரவேண்டும் என்பதுதான்.

உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் மாணவர்கள் தலைசிறந்த விஞ்ஞானிகளாக வரவேண்டும் என்பதை பிரதமர் எடுத்துச் சொல்வதை நாம் பார்க்கின்றோம். ஆகவே உள்நாட்டு உற்பத்தி என்பது அதிகமாக இருக்க வேண்டும். இதில் மாணவர்கள், இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது நாடு தலைசிறந்த நாடாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. பிற நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற நாடாக இருக்கிறது. இதற்கு அடித்தளம் அடிப்படை கல்விதான். அது எங்கே கிடைக்கும் என்றால் பள்ளியில் மட்டும் தான் கிடைக்கும். பள்ளியில் கிடைக்கும் கல்வி சிறப்பாக இருந்தால் உயர்கல்வி எளிதாக இருக்கும்.

ஆகவே பள்ளி படிப்பில் பிள்ளைகள் தங்களது எண்ணத்தை சிதறவிடாமல் படிக்க வேண்டும். புதுச்சேரி சிறிய மாநிலம். கல்வியில் முதன்மை வகிக்கின்ற மாநிலம். எனவே தொடர்ந்து கல்வியில் முதன்மையான யூனியன் பிரதேசமாக இருந்து கொண்டிருக்க அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். அதற்கான வசதி, வாய்ப்புகளை அரசு உருவாக்கி கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

x