செய்யூர் விசிக எம்எல்ஏவை கண்டித்து வருவாய்த்துறையினர் காத்திருப்பு போராட்டம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்து வருவாய்த் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் வருவாய் ஆய்வாளராக கல்பனா என்பவர் பணிபுரிந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு உயிரிழந்த ஒருவரின் இரண்டாவது மனைவிக்கு வாரிசு சான்று வழங்க வலியுறுத்தியுள்ளார். இதற்கு வருவாய் ஆய்வாளர் வாரிசு சான்று வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில் வருவாய் ஆய்வாளரை செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு ஒருமையில் பேசியுள்ளார்.

இந்நிலையில் அவரை கண்டித்து அப்போது வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் பனையூர் பாபு தன் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக வருவாய்த்துறையினர் செயல்பட்டதாக கூறி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 22 பேர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

வருவாய்த்துறையினர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெங்கட்ரமணன் தலைமையில் இன்று செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு

இதில் கிராம நிர்வாக அலுவலர் சங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், கிராம உதவியாளர் சங்கம், கிராம நிர்வாக உதவியாளர் முன்னேற்ற சங்கம், நில அளவையர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த காத்திருப்பு போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

x