கும்பகோணம்: மருத்துவர்கள் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ராஜேஷ்ராம் தலைமை வகித்தார். இந்திய மருத்துவ கழகத் தலைவர் ராஜன் முன்னிலை வகித்தார்.

மருத்துவர்கள் ராஜேஸ்வரன், சுகந்தி, பழனியப்பன், செவிலியர்கள் சலீம், குணவதி மற்றும் இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சென்னை கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர். இதில் திருவிடைமருதூர், பாபநாசத்தில் உள்ள மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை 2 மணி நேரம் அவசர சிகிச்சைப் பிரிவைத் தவிர மற்ற பிரிவு பணிகளை புறக்கணித்தனர். இதேபோல் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

x