8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம்: சென்னை மாநகராட்சி அமைக்கிறது


கோப்புப் படம்

சென்னை: சென்னை மாநகரில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 48 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அந்த அளவுக்கு நகர்ப்புறங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள பலருக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய இயலாத நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 6 மகளிருக்கான உடற்பயிற்சிக் கூடங்களாக இயங்கி வருகின்றன. இவை பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. பிரத்யேக பயிற்றுநர், நவீன உபகரணங்கள் ஏதும் இல்லை என மகளிர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர்களில் 103 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் மகளிர் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் மேலும் 8 மகளிர் உடற்பயிற்சிக் கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடல் ஆரோக்கியத்தில் தற்போது மகளிருக்கு அதிக விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் மகளிர் உடற்பயிற்சிக் கூடங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலம் 68-வது வார்டு ஜவகர் நகரில் ரூ.42.20 லட்சத்திலும், கோடம்பாக்கம் மண்டலம் 128-வது வார்டு இளங்கோ நகர் சாலையில் ரூ.36.97 லட்சத்திலும் மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 80, 81, 82, 85, 87, 195 ஆகிய வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் உடற்பயிற்சிக் கூடமும் 46 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை. ட்ரெட் மில் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் இடம்பெற உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

x