கோத்தகிரி: கோத்தகிரி மருத்துவமனையில் அவசர பிரிவு படுக்கையில் நாய் ஒன்று படுத்திருந்த நிகழ்வுக்கு பின்பு, தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சிறுமிக்கு டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள இடுகொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மின்வெட்டு காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கி இருந்துள்ளது. ஜெனரேட்டரை இயக்காமல் சிறுமிக்கு டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கோத்தகிரி மக்கள் கூறும் போது, “பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என சாமானிய மக்களுக்கான ஒரே மருத்துவமனையாக கோத்தகிரி அரசு மருத்துவமனை இருக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில் அலட்சியப்போக்கு தொடர்கிறது.
நோயாளிகளின் படுக்கையில் நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும் போது, “மின்துண்டிப்பு ஏற்பட்ட காரணத்தால் உடனடியாக டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்” என்றனர்.