ஆவடி: ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை பூர்வீகமாக கொண்டவர் பிரபாகரன் (53). இவர், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த அமுதூர் மேடு, விநாயகம் நகர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 1997ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த பிரபாகரன், தற்போது ஆவடி காவல் ஆணையரகம் - மத்திய குற்றப்பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 4ம் தேதி முதல் ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான உடல் தகுதி மற்றும் அலுவல் பயிற்சியில் இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பிரபாகரன், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை பயிற்சியில் ஈடுபட்ட சக போலீஸார், மீட்டு சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் ஏற்கெனவே பிரபாகரன் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த பிரபாகரனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் போது பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.