ராமேசுவரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலம் பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார்.
ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள், தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் ஆகியவற்றால், புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி 1.03.2019 அன்று காணொலி மூலம் புதிய பாம்பன் ரயில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
பாலத்தின் நீளம் 2078 மீட்டர். கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் புதியப் பாலம் எழுப்பப்பட்டுள்ளது. 101 தூண்களைக் கொண்ட இந்த பாலத்தில் 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளம், 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிஃட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும்.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள், தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, செங்குத்து தூக்குப் பாலத்தை தூக்கி இறக்கும் சோதனை, பாலத்தில் ரயில்கள் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இறுதிகட்டமாக ரயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக இரண்டு நாள் ஆய்வு பாம்பனில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையில் துவங்கியது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி தலைமையில் ரயில்வே அதிகாரிகள், பாம்பன் அக்காள் மடத்தில் உள்ள ரயில்வே கேட், பாம்பன் ரயில் நிலையம், பாம்பன் தெற்குவாடி ரயில்வே கேட், புதிய பாம்பன் பாலம், புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம், இதற்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நாளை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புதிய பாம்பன் ரயில் பாலம் வழியாக பாம்பன் ரயில் நிலையம் வரையிலும் சோதனை ரயில் ஓட்டம் மற்றும் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப்பாலத்தை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையகம் சார்பாக சோதனை செய்யப்பட உள்ளது.