புதுச்சேரி: தீபாவளி உதவித்தொகை தரக்கோரி நலச்சங்க அலுவலகத்தை மழையிலும் தொழிலாளர்கள் இன்று முற்றுகையிட்டனர். இன்னும் இரு தினங்களில் வங்கிக்கணக்கில் வரவு வைப்பதாக அதிகாரிகள் உறுதி தந்தனர்.
புதுவை அரசு சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கத்தின் மூலம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படும் என கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்தபின்னும் இதுவரை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதன்பிறகும் இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை. இதையடுத்து பாரதி பூங்கா அருகே வர்த்தகசபை வளாகத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை சிஐடியூ அமைப்புசாரா தொழிலாளர்கள் இன்று முற்றுகையிட்டனர்.
போராட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்க பொதுச்செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். அங்கு உதவித்தொகை வழங்கக்கோரி தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் ஆட்டோ சங்கத்தினர், வீட்டு வேலை செய்யும் பெண்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக அங்கு வந்த தொழிலாளர் துறை அதிகாரிகள், இன்னும் இரண்டு தினங்களில் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி அளித்தனர்.
மழையிலும் போராட்டம் சுமார் 4 மணி நேரம் நடந்தது.