நீலகிரியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தம்


உதகை: நீலகிரியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணி மாறுதலை எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நோட்டீஸ் வழங்காமல் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் 77 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்களின் கீழ் 65 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 330 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த சங்கங்களில் 23 செயலாளர்களுக்கு கூட்டுறவுத்துறை பணி மாறுதல் வழங்கியது. இதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் இயங்கவில்லை. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஏ.பி.நாகராஜ் கூறும் போது, ''2019ம் ஆண்டு பொதுப்பணி மாறுதலை அறிவித்து அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து அப்போது வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பணியாளர்கள் தரப்பில் 30 கோரிக்கைகள் வைத்தோம். இதனால், பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றிய பின்னர் பணி மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் கடன் சங்க செயலாளர்களை பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால், கடன் சங்க பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பணி மாறுதல் உத்தரவு திரும்ப பெற விட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.

இது குறித்து கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரா.தயாளனிடம் கேட்ட போது, ''பொதுப்பணி நிலைத்திறன் கீழ் வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. மொத்தமுள்ள 77 சங்கங்களில் 21 பேருக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதில், ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணத்தால் 6 பேரில் பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டது. 15 நபர்கள் பணியில் சேரவில்லை.

இதில், 6 நபர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், இவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இவர்கள் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி வருகின்றனர். மேலும், நோட்டீஸ் வழங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கங்களின் கீழ் இயங்கும் 66 ரேஷன் கடைகளில் 48 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் பாதிக்கப்படுவர்கள் என்பதால், அருகில் உள்ள ரேஷன் கடைகள் ஊழியர்களை கொண்டு இந்த கடைகளை நாளை முதல் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

x