ஆர்வத்தில் ஆரம்பிக்கும் போதைபொருள் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


புதுச்சேரி: ஆர்வத்தில் ஆரம்பிக்கும் போதைபொருள் பழக்கம் தான் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில சுகாதார இயக்கம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் (அரசு மார்பு நோய் நிலையம்), புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைந்து இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் பாதிப்பு குறித்த கல்லூரிகளின் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தை இன்று ஏற்பாடு செய்தது.

புகையிலை மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், உடல்நல கேடுகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த விழிப்புணர்வை முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் வரவேற்றார். இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியின் இயக்குநர் டாக்டர் உதயசங்கர் தொடக்க உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, "புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பழக்கத்தை பலரும் ஒரு ஆர்வத்தில் ஆரம்பிக்கின்றனர். ஆனால் அதுதான் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாறுகிறது. மற்றவர்களை விட ஆசிரியர்கள் தான் மாணவர்களுடன் அதிகளவில் நெருங்கி பழகுகின்றனர். அதனால் அவர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆசிரியர்களால் எளிதில் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே அவர்களை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் போதை ஒழிப்பு குழு உள்ளது. அந்த குழுவை சரியான முறையில் கண்காணித்து முறையாக செயல்படுத்தினால் மாணவர்களிடம் ஏற்படும் போதை பழக்கத்தை தடுக்கலாம். 18 வயது பூர்த்தியானவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கல்லூரி முதல்வர்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று ஆட்சியர் கூறினார்.

சீனியர் எஸ்பி கண்காணிப்பாளர் கலைவாணன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போதை மற்றும் புகையிலை பற்றிய விளக்கவுரை இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர் பிரகாஷ் மதியழகன் வழங்கினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில ஆலோசகர் டாக்டர் சூரிய குமார் செய்திருந்தார். இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ராமச்சந்திர பட் நன்றி கூறினார். இறுதியில் போதை மற்றும் புகையிலைக்கு எதிரான உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது.

x