தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகம்: காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!


படங்கள்: ஆர்.வெங்கடேஷ்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.13) காலை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், திருச்சி கோட்ட முதன்மை வர்த்தக மேலாளர் ஜெயந்தி, மலிவு விலை மருந்தக திட்டத்தின் தமிழ்நாடு தலைவர் நாராயணன், திருச்சி திட்ட மேலாளர் நஷீர் அஹமத், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், மாமன்ற உறுப்பினர் ஜெய்சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மலிவு விலை மருந்தகம் இந்தியாவில் கடந்த நவம்பர் 2008ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 14,300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது . தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை மருந்தகத்தின் மூலம் இதுவரை மக்கள் ரூ.25,000 கோடி சேமித்துள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு ரூ.120 கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டில் ரூ.2,000 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட மலிவு விலை மருந்தகத்தின் மூலம் 7 ஆயிரம் பேர் ரூ.4.33 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தஞ்சாவூரில் இன்று மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், காரைக்கால், வேலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலும் மலிவு விலை மருந்தகம் திறக்கப்பட உள்ளது.

இந்த மலிவு விலை மருந்தகத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கும், உள்ளூரில் வசிக்கும் பொது மக்களுக்கும் தங்களுக்கு தேவையான மருந்தகங்களை வாங்கி பயன்படுத்த முடியும். இந்தியாவில் வருகிற 2025 -26 ஆம் ஆண்டுக்குள் 25,000 மலிவு விலை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x