அடுத்த 50 ஆண்டுகள் மாணவர்களே சுற்றுச்சூழல் தூதுவர்கள்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேச்சு


ராஜபாளையம்: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக இருக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.

ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் "மேற்கு தொடர்ச்சியும் - மேகமலையும்" என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ராம்கோ சமூக சேவை அமைப்பின் டி.எஸ்.சுப்ரமணியராஜா வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறியதாவது: "இன்று உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து காலநிலை மாற்ற பிரச்சினை குறித்து விவாதித்து வருகின்றன. தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகர மக்கள் குடிநீர் தேடுவதில் தான் ஒரு நாளில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக மழை கொட்டித் தீர்த்தது.

அதற்கு சில நாட்கள் முன்னதாக அதே மதுரையில் தான் நாட்டிலேயே மிக அதிக வெப்பம் பதிவானது. இது எதனால் நடந்தது என்பதை கணிக்க முடியவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாமும் உணர ஆரம்பித்து உள்ளோம். இந்தியாவில் அதிக நகரங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் 52 சதவீத மக்கள் நகர் புறங்களில் வாழ்கிறார்கள். விருதுநகர் மாவட்டதில் 8 சதவீதம் காடுகள் தான் உள்ளது. 3ல் 1 பங்கு காடுகள் இருந்தால் தான் சமநிலை ஏற்படும்.

நகரமயமாக்கல் காரணமாக காடுகளின் பரப்பளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது. ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றின் பலனை அனுபவிக்கும் மக்களே, அதில் குப்பைகளை கொட்டுகின்றனர். ஆனால் நமது மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராஜபாளையம் பகுதியின் எதிர்க்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இரு நீர்த்தேக்கங்களையும் புனரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தோம். அதன் பலனாக விருதுநகர் வந்த முதல்வர் நீர்த்தேக்கம் சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். விலை மலிவு என்பதால் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி தூக்கி எரிவதால், விலங்குகள், பறவைகள், நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். பட்டாம்பூச்சிகளின் மகரந்த சேர்க்கை மூலமாக தான் விளைச்சல் அதிகமாக நடக்கிறது. காடுகளின் உணவு சங்கிலியில் சமநிலை இல்லாததால் வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வந்து பயிர்களை சேதப்படுத்துவது அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினையை நமது விவசாயிகள் அதிகமாக எதிர்கொள்கின்றனர். சுற்றி நடக்கும் சூழல் குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா என்பது தான் முக்கியம்.

படித்த இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அடுத்த 50 ஆண்டுகள் மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாக இருக்க வேண்டும்" என்று ஆட்சியர் கூறினார்.

இதில் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல், விலங்குகள், பறவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கிரீன் ஃப்யூச்சர் பவுண்டேஷன் பல்லுயிர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜஸ்டஸ் போஸ்வா, பறவையியல் வல்லுநர் டாக்டர் பத்ரி நாராயணன், ஊட்டி அரசு கல்லூரி வனவிலக்கு உயிரியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன், சிவகங்கை பசுமை அமைப்பை சேர்ந்த டாக்டர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பேசினர். இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

x