திருப்பூர் வேலம்பட்டி சுங்கச்சாவடி தொடர்பான பேச்சுவார்த்தை: போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவிப்பு


ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர்: பல்லடம் அருகே வேலம்பட்டியில் சுங்கச்சாவடியை, சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் அப்பகுதி விவசாயிகள்,பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளனர்.

பல்லடம் அடுத்த அவிநாசிபாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழியாக தாராபுரம் மதுரை கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவிநாசியில் இருந்து அவிநாசிபாளையம் திருப்பூர் மாநகர் வழியாக 14 சிக்னல்களைக் கடந்து 32 கிலோமீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி வேலம்பட்டி பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் வேலம்பட்டியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான சுங்கச்சாவடியானது அமைக்கப்பட்டது. மேலும் அதற்கு பல்வேறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

சுங்கசாவடியில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி முன்பு வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தற்போது சுங்கச்சாவடி திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (நவ.13) விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மேலும் வேலம்பட்டி சுங்கச்சாவடியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை திரும்ப பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து 6 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

x