கி.பி.1638ம் ஆண்டின் தளவாயான் சேதுபதி மன்னரின் கல்வெட்டு: ராமநாதபுரம் அகழ்வைப்பகத்தில் ஒப்படைப்பு!


ராமேசுவரம்: குளத்தூரில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.1638-ம் ஆண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் கல்வெட்டு ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் இயங்கி வரும் தொல்லியல் துறை அகழ்வைப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் அருகே குளத்தூரில் சசிக்குமார் என்பவரின் வீட்டின் பின்புறம் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் பழமையான கல்வெட்டு இருப்பதை அறிந்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு படி எடுத்து ஆய்வு செய்தார்.

கல்வெட்டில் ''சகாத்தம் 1560-ன் மேல்ச் செல்லா நின்ற வெகுதானிய வருஷம் ஆவணி 5-ல் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமிள மடை உடைய நாயன் தழவாயான் சேதுபதி காத்த தேவர் புண்ணியம்'' என தொடங்கி 12 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

இதன் காலம் ஆங்கில ஆண்டின்படி கி.பி. 1638. இது இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும், அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பையும் குமிழி மடை என்பர். கல்பெட்டியின் மேற்பகுதியிலும், தரைமட்டத்திலும், இருக்கும் நீரோடி, சேறோடி துளைகள் மூலம் கண்மாயின் அதிகப்படியான நீரும், சேறும் வெளியேற்றப்பட்டு, பாசனக்கால்வாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத்துக்கு நீரை திறக்கும்போது துளையை மூடியிருக்கும் கல்லை நீக்குவர். குளத்தூர் கண்மாயில் இத்தகைய குமிழி மடையை மன்னர் அமைத்துத் தந்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.

தளவாயான் சேதுபதி மன்னர் காலத்தைச் சேர்ந்ததாக 2 கல்வெட்டுகள், 3 செப்பேடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய கல்வெட்டு இம்மன்னரது வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது. இவர் நீர்ப்பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறிய முடிகிறது.

இந்த கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரியிருந்தது. அதனடிப்படையில் இக்கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை, ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ்வைப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொல்லியல் அலுவலர் சுரேஷ், குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் க.தமிழரசி, ஊராட்சி மன்றத் தலைவி பா.நாகலட்சுமி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஆசிரியர் பால்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

x