கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ரூ.2.09 கோடியில் கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபத்தை இன்று (நவ. 13ம் தேதி) காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கரூரில் நடந்த நிகழ்வில் ஆட்சியர் தங்கவேல், மேயர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்று குத்து விளக்கேற்றினர்.
கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். இக்கோயிலுக்கு என முடி காணிக்கை மண்டபம் இல்லாததால் தற்காலிக இடத்தில் முடி காணிக்கை செலுத்தப்பட்டு வந்தது. இதற்காக கோயில் வடக்கு வரத வீதியில் ரூ.2.09 கோடியில் முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் கட்டுமான பணிகள் அண்மையில் தொடங்கியது. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் இதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் முடி காணிக்கை மண்டபத்தை திறந்து வைத்தார். இதையொட்டி கரூர் தாந்தோணிமலை முடி காணிக்கை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் தங்கவேல், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மண்டலக் குழுத் தலைவர்கள் கனகராஜ், ராஜா, வட்டாட்சியர் குமரேசன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் (பொ) இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.