கும்பகோணம்: மக்களுக்காக பேசுங்கள், செயல்படுங்கள் வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் எனக் கும்பகோணம் மாமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்குச் சென்று முறையிடும் இயக்கம் விரைவில் தொடங்கப்படும் என வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், செயலாளர் வி. சத்திய நாராயணன் வரவேற்றார். பேரமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் வேதா. ராமலிங்கம், பொருளாளர் கியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், "மக்கள் மீதும், தொழில் வணிகம் செய்பவர்கள் மீதும் நடத்தப்படும் வரி பயங்கரவாதத்தை மக்கள் பிரதிநிதிகள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மத்திய அரசின், வணிகப் பயன்பாட்டில் உள்ள வாடகை கடைகளுக்கு 18 சதவீதம் சரக்கு சேவை வரி விதித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் மாநகராட்சி வரி விதிப்புகள் மிகவும் கடுமையாக உள்ளது. தமிழகத்திலேயே கும்பகோணம் மாநகராட்சியில் தான் சொத்து வரி அதிகம், தற்போது மீண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்து மாநகராட்சி உரிமம் பெறுவதற்கான கட்டணம் இஷ்டம் போல் வசூலிக்கப்படுகிறது. பல வகையான வரி பயங்கரவாதத்தை மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே செய்து வருகின்றன. ஆன்லைன் வர்த்தகத்தால் பெருமளவு விற்பனை சரிந்து வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வரி உயர்வுகள் தொழில் வணிகம் செய்பவர்களை வாட்டி வதைப்பதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், கண்டும் காணாமல் இருப்பது நியாயமல்ல.
மக்கள் சார்பில் மாநகராட்சியை இயக்குவதற்காகத்தான் மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளோம். வரி உயர்வுகளைச் சரி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் மாமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. எனவே கும்பகோணம் மாநகராட்சி அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்குத் தேடிச் சென்று மாமன்ற உறுப்பினர்களே, மக்களுக்காக பேசுங்கள், செயல்படுங்கள், வரி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என நேரில் முறையிடும் இயக்கத்தை விரைவில் தொடங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு உறுப்பினர்கள் வாசுதேவன், தனசேகர், வெங்கடேஷ், கொத்தா சுதர்சன், திருநாவுக்கரசு, வீரமணி, ராமு, கார்த்திகேயன், ரவிச்சந்திரன் ராஜா, கணேஷ், மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைச் செயலாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.