கடலூர்: சிதம்பரத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (நவ.13) காலை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கூடலையாத்தூர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிதம்பர நகர தலைவர் பெரியசாமி வரவேற்று பேசினார். மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் வேளாண்மை பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கான வாழ்வாதாரமாக கருதப்படுகிறது. அதுபோல மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் கொண்டு வர வேண்டும். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்கல்பூண்டி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.32 லட்சத்தில் தடுப்பணை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணி துவங்கப்பட வேண்டும்.
மேலும் விருத்தாசலம் கோட்டத்தில் தூர்வாரப்படாத ஏரி. குளங்கள் தூர் வாரப்பட வேண்டும். கடலூர் மாவட்டம் மா.புளியங்குடி மயிலாடுதுறை மாவட்டம் சித்தமில்லி இடையே குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். வீராணம் ஏரியின் பாசன கிளைவாய்க்கால்களை தூர்வார வேண்டும். வடக்கு ராஜன் வாய்க்காலின் பாசன வாய்க்கால் தூர் வாரப்பட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் வடகிழக்கு பருவமழை தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதம மந்திரி நிதி உதவி கிசான் திட்டம் போல தமிழக முதலமைச்சர் நிதியுதவி கிசான் திட்டம் என அறிவிக்க வேண்டும். இலவச மின் இணைப்புக்கு ஆபத்தாக விளங்கும் மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது . காட்டுமன்னார்கோயில் நகர தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.