முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் காலமானார்


குன்றத்தூர்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதண்டம் (99) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஈ.கோதண்டம் (99) கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 1989 -91-ம் ஆண்டு காலகட்டம், 1996 - 2001-ம் ஆண்டு என 2 முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். 1991-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கோதண்டம் மறைவுக்கு தி.மு.க. நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நவ.13-ம் தேதி (இன்று) குன்றத்தூரில் நடைபெறுகிறது. அவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோதண்டத்தின் மகன் கோ.சத்தியமூர்த்தி குன்றத்தூர் நகராட்சி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் கோதண்டம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். திறம்பட மக்கள் பணி ஆற்றியவர். அவரை இழந்துவாடும், மகன் குன்றத்தூர் நகர்மன்றத் தலைவர் கோ.சத்தியமூர்த்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் திமுகவினருக்கும், தொகுதி மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

x