கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, அரசு சார்பில் டிச.31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் வெள்ளிவிழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்கிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:
வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக – தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மு.கருணாநிதி. குமரிக்கடல் நடுவே திருவள்ளுவருக்கு 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார். அந்த சிலை அமைக்கப்பட்டு கால்நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை.
அதை கொண்டாடும் விதமாக, டிச.31 மற்றும் அடுத்தாண்டு ஜன.1-ம் தேதிகளில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த உலகத்துக்கே பொதுமறை வழங்கியவர் திருவள்ளுவர். சாதி, மத பேதங்களை கடந்து தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த திருவள்ளுவர் தந்த “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை வாழ்வியலாக பாமர மக்களின் உள்ளங்களிலும் பதிய வைத்து, உதடுகளை உச்சரிக்க வைத்தது திராவிட இயக்கம். ஆனால், அந்த வள்ளுவருக்கே காவிச் சாயம் பூச இன்றைக்கு ஒரு கும்பல் நினைக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் “சமத்துவத்தை வலியுறுத்தியவர் வள்ளுவர். அவர் எல்லோருக்கும் பொதுவான தமிழர்களின் அடையாளம்”- என்று மீண்டும் முழங்க வேண்டியிருக்கிறது.
திருக்குறள் மாநாடுகளை நடத்தி வள்ளுவத்தை உயர்த்திப் பிடித்தவர் தந்தை பெரியார். “குறள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் – உங்கள் இல்லங்களில் மட்டுமல்லாமல் – உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய குறள் எனும் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்புகின்ற பணியை தன்னுடைய ஒப்பற்ற கடமையாக கருதி செயல்பட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
குமரியில் சிலை அமைக்க 1975-ஆம் ஆண்டே திட்டமிட்டாலும், அவருடைய கனவு 2000-ஆம் ஆண்டுதான் நிறைவேறியது. 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடியில் சிலை அமைத்தார். கருணாநிதி எதை செய்தாலும் கலை நுணுக்கத்தோடு பார் போற்றும் வகையில் செய்வார் என்பதற்கு விண்ணைத் தொடும் வண்ணம் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையும் ஒரு சான்று. இப்படி பெருமைமிகு சிலை வெள்ளி விழா காண்கிறது.
இந்த வெள்ளிவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் - கல்லூரி மாணவர்களிடையே சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஏ.ஐ. மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வாயிலாக திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படும்.
திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள இடங்கள் வரைபடத்தில் குறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். திருவள்ளுவர் சிலை அருகில், சீரொளிக் காட்சி (3D லேசர்) ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் இணையக் கழக மையங்கள் மூலம் திருக்குறளின் பெருமைகள் குறித்த போட்டி நடத்தப்படும். அனைத்து மாவட்ட நூலகங்களிலும், திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் செய்யப்படும்.
டிசம்பர் 25 முதல் 30 வரை மாவட்ட அளவில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம், பேச்சரங்கம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் இந்தியாவின் வரலாற்றை தென் குமரியிலிருந்து எழுத வேண்டும் என்ற நம்முடைய இலக்கின் அடையாளமான கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். உலகெங்கும் உள்ள என் அருமைத் தமிழர்களை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்