சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிநியமனம் வழங்கும் முன்பாக அவர்களின் குற்றப்பின்னணியை ஏன் போலீஸார் மூலமாக முன்கூட்டியே ஆராயக் கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதன்பிறகு நடத்தப்படும் போட்டித் தேர்வு மூலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என கடந்த 2018-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு குற்ற வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பணிநியமனத்தின் போதே அவர்களின் குற்றப்பின்னணியையும் ஏன் முன்கூட்டியே ஆராயக் கூடாது என கேள்வி எழுப்பினர். அதற்கு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கும்போது ஆர்.நீலகண்டன், பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் குற்றப்பின்னணி குறித்து அவர்களிடம் கேட்கப்படுவதாக விளக்கமளித்தார்.
அதற்கு நீதிபதிகள், "ஒரு வழக்கறிஞர் பார் கவுன்சிலில் பதிவு செய்யும் முன்பு போலீஸார் மூலமாக விசாரிக்கப்படுகிறது. அதேபோல காவல் துறையிலும் பணிக்கு சேருபவர்களின் குற்றப்பின்னணி ஆராயப்படுகிறது. அப்படியிருக்கும்போது எதிர்கால தலைமுறைகளை நல்வழிப்படுத்தும் ஆசிரியர் பணிக்கு சேர்வோரின் குற்றப்பின்னணி குறித்து நியமனத்துக்கு முன்பாகவே ஏன் போலீஸார் மூலமாக ஆராயக் கூடாது. இதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என அறிவுறுத்தினர். பி்ன்னர் இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவ.26-க்கு விசாரணையை தள்ளிவைத்தனர்